தமிழ் சினிமாவின் பிரபலமான துணை நடிகர்களில் ஒருவராக பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாயி சுந்தர் தற்போது காலமானார். நடிகர் சரத்குமாரின் மாயி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான நடிகர் சுந்தர் அதன் பிறகு மாயி சுந்தர் என அறியப்பட்டார். தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார்.

குறிப்பாக இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வெண்ணிலா கபடி குழு அணியில் ஒரு வீரராக முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மாயி சுந்தர், தொடர்ந்து குள்ளநரி கூட்டம், மிளகாய், வெண்ணிலா கபடி குழு 2, சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் மிகுந்த அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2:45 மணியளவில் நடிகர் மாயை சுந்தர் காலமானார். அவருக்கு வயது 50. நடிகர் மாயி சுந்தரின் மறைவுக்கு தமிழ் சினிமாவைச் சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்த நிலையில், தற்போது நடிகர் மாயி சுந்தர் அவர்களும் உயிரிழந்தது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மாயி சுந்தரின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

#JUST_IN : "வெண்ணிலா கபடிக்குழு" புகழ் நடிகர் மாயி சுந்தர் காலமானார் ! 💔#GalattaNews 📢#MaayiSundar #VennilaKabadiKuzhu pic.twitter.com/GxdrQpVno7

— Galatta Media (@galattadotcom) December 24, 2022