விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2018-ல் வெளிவந்த படம் 96. இந்த படத்தின் மூலமாக பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

பள்ளி பருவ காதல், அதன் பிறகு பிரிவு, மற்றும் பல வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்கள் ரீயூனியன் விழாவில் ஹீரோ ராம் மற்றும் ஹீரோயின் ஜானு இருவரும் சந்திக்கும் போது அவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் தான் 96 படத்தின் கதையாக இருந்தது. தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காதலர்கள் இதை கொண்டாடினார்கள். 

தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக் படம் ஜானு என்ற பெயரில் உருவானது. அதில் சமந்தா மற்றும் சர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர். அதையும் பிரேம் குமார் தான் இயக்கியிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த வர்ஷா பொல்லமா, விஜய்சேதுபதியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன் ராம் சாரை படம்பிடித்தது என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் போட்டோகிராபர் விஜய்சேதுபதியின் மாணவியாக நடித்திருப்பார் வர்ஷா. படத்தின் துவக்க காட்சிகளில் நடித்திருப்பார். 

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நடிகைகளில் வர்ஷாவும் ஒருவர். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 2015-ம் ஆண்டு இவர் நடிகையாக அறிமுகமானாலும், பிகில் படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார். காயத்ரி என்ற பாத்திரத்தில் கால்பந்து ஆட்டக்காரராக அசத்தியிருப்பார். 

அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் பேட்சுலர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். கெளதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். வெற்றிமாறனிடம் பணிபுரிந்த மதிமாறன் இந்த படத்தை இயக்குகிறார். இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் தம்பியான ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் மிடில் கிளாஸ் மெலோடிஸ் படத்தில் கதா நாயகியாக நடிக்கிறார்.