தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துபவர் வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்குப் பிறகு மிகவும் போல்டான கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்கத் துவங்கினார். தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், தனுஷுடன் மாரி 2 படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக வெல்வெட் நகரம் எனும் படத்தில் நடித்திருந்தார். 

கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். வேலை இல்லாததால் வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் உணவு வழங்கியதை நம்மால் பார்க்க முடிந்தது. மேலும் அவர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில் பலரும் தவித்த நிலையில் அவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பல்வேறு விதங்களில் தொடர்ந்து ஆக்டிவாக பல உதவிகளை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது மட்டுமின்றி அதிக தேவை இருக்கும் மக்களுக்கும் அவர் உதவி வருகிறார். சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று புலம்பெயர் தொழிலாளர்கள் சென்னையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் செல்வதற்காக கிளம்பிய நிலையில், சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் நேரடியாக சென்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவு, தண்ணீர், சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

வரலக்ஷ்மி டேனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. கடைசியாக யார் பார்த்தது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி நேரடியாக Zee5 தளத்தில் வெளியாகவுள்ளது. 

லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் லைஃப் ஆஃப் பை எனும் பேக்கரி கம்பெனியை துவங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.