லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கொள்ளையில் ஈடுபட்டது யார் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில், ஆள் நுழையும் அளவுக்குத் துளையிட்டு கொள்ளையர்கள் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

jewellery Robbery

அதன்படி, கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2.11 மணி முதல் 3.15 மணி வரை இந்த கொள்ளையர்கள், விலங்குகள் முகம் கொண்ட முகமூடி அணிந்த தரையோடு தரையாக ஊர்ந்து நுழைவதும், வட மாநிலத்தவர்கள் உட்காருவது போல், குத்த வைத்து உட்கார்ந்து ஷோ கேசில் உள்ள நகைகளை மட்டும் கொள்ளையடித்துள்ளனர். 

ஆனால், கடையில் மொத்தம் 200 கிலோ தங்க நகைகள் இருந்துள்ள நிலையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான  700 விதமான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த நகைகளின் மொத்தம் எடை 20 கிலோ இருக்கும் என்றும் அந்த கடையின் உரிமையாளர்  கிரண்குமார் தெரிவித்தார்.

அதன்படி நகைகளைக் கொள்ளையடித்தது வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து, அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

jewellery Robbery

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிரே வந்தவர் ஹெல்மட் போடாமல் டூவிலரைப் ஓட்டி வந்ததால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதனால், டூவிலரில் பின் பக்கம் அமர்ந்திருவர் கையில் வைத்திருந்த பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு, ஓட்டம் பிடித்துள்ளார். இதில், கீழே விழுந்த பெட்டி தானாக திறந்து, அதில் உள்ள தங்க நகைகள் வெளியே தெரிந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், டூவிலரை ஓட்டி வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அத்துடன், பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், டூவிலரை ஓட்டிவந்தவர் பெயர் மணிகண்டன் என்பதும், தப்பிய ஓடியவர் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. அத்துடன் மணிகண்டனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். இதில், பல்வேறு உண்மைகள் அடுத்தடுத்து தெரிய வந்தன.

jewellery Robbery

அதன்படி, லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் மொத்தம் 8 பேர் ஈடுபட்டதாகவும், கடையில் துளையிட்டு உள்ளே சென்றது 2 பேர் மட்டும் தான் என்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை தொடர்பாகத் தப்பி ஓடிய சுரேஷின் தயார்  சீராத்தோப்பை சேர்ந்த கனகவல்லி, மாரியப்பன், ரவி, குணா உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கத் திருவாரூரில் மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

jewellery Robbery

குறிப்பாகத் தப்பிய ஓடிய சுரேஷ், பிரபல வங்கிக் கொள்ளையன் முருகனின் உறவினர் என்பது தெரியவந்தது. இதனால், முருகன் தலைமையிலான கும்பலே, இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால், காவல்துறை உயர் அதிகாரிகள் தற்போது திருவாரூர் விரைந்துள்ளனர். இதன் காரணமாகத் திருவாரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.