2020 தீபாவளிக்கு வெளியான சூரரைப் போற்று படத்துக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இதில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திலிருந்து தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தார்.

தனது அடுத்த படங்களுக்காக கடுமையான உடற்பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் வழியாக தனது உடற்பயிற்சியாளரைத் தொடர்பு கொண்டு தனது பயிற்சிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து ஒரு பதிவை அவரது பயிற்சியாளரான நிர்மல் நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நம் அனைவருக்குமே இது ஒரு கடினமான காலகட்டமாக இருந்தது. ஆனால், இந்த நேரத்திலும் வெற்றிக்கான நமது தேடலே நம்மை தொடர்ந்து இயங்கச் செய்கிறது. நீண்டகாலமாக எனக்கு சூர்யாவை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், இந்தக் காலகட்டம் முழுக்க நாங்கள் இணைந்து, ஆரோக்கியமாகவும், நல்ல உடற்கட்டுடனும் இருப்பதை உறுதி செய்து கொண்டோம்.

ஆன்லைனில் சூர்யாவுக்குப் பயிற்சியளிப்பது என்னுடைய தேர்வாக இருக்கவில்லை. ஆனால், சூழல் காரணமாக அந்த நிலை ஏற்பட்டது. சூர்யாவின் ஒழுக்கமும், கவனமுமே அந்தக் கடினமான காலகட்டத்தில் என்னை ஊக்கப்படுத்திய விஷயம். எனக்கும் இன்னும் பலருக்கும் அவர் ஒரு முன்மாதிரி. தினமும் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் ஏதோ ஒரு வகையில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்று நிர்மல் நாயர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் நவரசா என்ற ஆந்தாலஜி உருவாகி வருகிறது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள ஆந்தாலஜியில் நடித்துள்ளார் சூர்யா. இதன் வெளியீட்டு தேதிக்காகவும் ஆர்வமாக உள்ளனர் சூர்யா ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nirmal Nair🇮🇳 (@nirmal.nair1)