போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்த துவங்கினர். அப்போது போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர். இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் பரபரப்பு புகார் கூறியிருந்தார். 

போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதியை கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். 

இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இவர்கள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நடிகை ராகிணியின் ஜாமீன் மனு, சில முறை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, நடிகை சஞ்சனா கல்ராணிக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனால் 3 மாதத்துக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.