இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று.  சிம்ப்ளி ஃப்ளை டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பொம்மி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிகை அபர்ணா பாலமுரளியும் நடிகை ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

வழக்கமான பயோபிக் திரைப்படங்களின் பாணியில் இருந்து கொஞ்சம் விலகி விறுவிறுப்பான திரைக்கதையோடு மிரள வைக்கும் காட்சி அமைப்புகளோடு உருவான சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்காக ரசிகர்கள் பேராவல் கொண்டிருந்த நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் நேரடியாக கடந்த வருடம் வெளியானது. இருப்பினும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம் சர்வதேச அரங்கிலும் தமிழ் சினிமாவின் பெருமையை பறைசாற்றியது.

இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான அபுடன்டியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா உடன் இணைந்து 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா இணைந்து தயாரிக்கும் சூரரைப்போற்று பாலிவுட் இயக்குனர் சுதா கொங்கராவே இயக்குகிறார். விரைவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.