1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா, கே.கே.செளந்தர், பசி சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு படம் ரீமேக் ஆகிறது.

கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார், ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இயக்குநர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது.

தற்போது முந்தானை முடிச்சு ரீமேக்கை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சசிகுமார் நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'சுந்தர பாண்டியன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

முந்தானை முடிச்சு ரீமேக்கை ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது சசிகுமாருடன் நடிக்கும் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.