தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடந்து மருத்துவக்குழுவினர் அவரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே அவர் குணமடைந்து வர வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சூரி உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் எஸ்.பி.பி. சார், விவரம் தெரிஞ்சு உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாள கூட கடந்ததில்ல.. விடியக்கால நடந்தாலும் சரி.. வீட்ல விஷேசம்னாலும் சரி.. தாலாட்டி எங்களை தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக் கொடுத்து எங்களை ஓட வைக்கிறதும் சரி.. எப்பவுமே உங்க பாட்டுத்தான். 

எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட.. நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடணும். உங்க குரல கேட்டுகிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும்ன்னு.. ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் சூரி. 

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.