பார்சலில் பாம்பு வந்ததால் இளைஞர் ஒருவர் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முத்துகுமரன், ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பன்ச் மாவட்டம், ராஜரங்பூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

snake delivered

சமீபத்தில், ஆந்திர மாநிலம் குண்டூர் சென்றிருந்த அவர், தனது வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி, அங்குள்ள தனியார் கூரியர் நிறுவனம் மூலம் தனது வீட்டிற்கு வருமாறு பார்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். முத்துகுமரன், ஆந்திராவிலிருந்து ஒடிசா திரும்பிய ஒரு சில நாட்களில் அந்த பார்சல், அவரது வீட்டிற்கு வந்துள்ளது.

இதனையடுத்து, பார்சலில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை ஒவ்வொன்றாக அவர் வெளியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று 4 அடி நீளமுள்ள விச பாம்பு ஒன்று பார்சலில் உள்ள பொருட்களிலிருந்து வெளியே வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துகுமரன், அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

snake delivered

இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனிடையே பார்சலில் பாம்பு வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.