தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி இன்று கோலிவுட்டின் நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் நடித்திருந்தார். ரஜினி ரசிகராக மட்டுமல்லாமல் ரஜினியின் பெயரில் ஒரு டீ கடையை நடத்துவது போல நடித்திருப்பார். ரஜினிமுருகன் திரைப்படத்தின் போக்கில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து ரஜினிமுருகன் டீ ஸ்டால் என்ற டீக்கடையை நடத்தி வருவார்கள். தற்பொழுது இதே நிகழ்வு நிஜத்தில் நடந்துள்ளது. SK ரசிகர் ஒருவர் ரஜினிமுருகன் டீ ஸ்டால் என்ற பெயரிலேயே டீக்கடை ஒன்றை புதிதாக திறந்துள்ளார்.

இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிமுருகன் டீ ஸ்டால் பதிவை பகிர்ந்து  நம்ம நண்பருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் கமர்ஷியல் திரைப்பயணத்தில் ஹிட்டாக அமைந்த படம் ரஜினிமுருகன்.  இதில் சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து இருக்க முதல்முறையாக சிவகார்த்திகேயன் இரண்டு வேடங்களில் இந்த திரைப்படத்தில் தோன்றி இருப்பார்.


சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது.