தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். கடைசியாக பேட்ட திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மங்களம் என்ற பாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமான விஐபி மற்றும் ஒன்ஸ்மோர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 1997ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் 23 வருடங்கள் நிறைவடைகிறது. ஒரே நாளில் அறிமுக நடிகையின் இரண்டு திரைப்படங்கள் வெளிவருவதும், அந்த இரண்டு படங்களும் வெற்றியடைவதும் ஆச்சர்யம் தானே. 

பிரபுதேவா, அப்பாஸ், ரம்பா ஆகியோர்களுடன் சிம்ரன் நடித்த விஐபி திரைப்படத்தை சபாபதி இயக்கியிருந்தார். சிவாஜி கணேசன், விஜய் ஆகியோருடன் சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தை SA சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றது சிம்ரனுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். 

இந்நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றியும் சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திரையுலக மேதை சிவாஜி கணேசன் அவர்கள் உடன் பணிபுரிந்த தினங்களை நாம் நினைத்துப் பார்த்து பூரிப்படைகிறேன். எனது வாழ்நாள் கனவு நிறைவேறியதும், அவருடைய ஆசிர்வாதம் எனக்கு முழுமையாக கிடைத்தது என்பதையும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நண்பன் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோர்களுடன் நான் தமிழ் சினிமாவில் அறிமுகமானது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்றும் சிம்ரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிம்ரனின் இந்த பதிவு அதிக லைக்குகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன் கைவசம் ராக்கெட்டரி, சுகர், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.