சிலம்பரசன் நடித்துவரும் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் 2006ல் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.கிருஷ்ணா. சூர்யா கதாநாயகனாக நடித்திருந்த அப்படத்தில் ஜோதிகா மற்றும் பூமிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சூர்யாவின் கல்லூரிக்கால காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகான காதல் ஆகிய பக்கங்களை சுவாரசியமாகப் பேசியிருந்த இப்படம், விமர்சன மற்றும் வசூல் ரீதியில் நல்ல வேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இதன் இசையைக் கூறலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'முன்பே வா', 'சில்லுனு ஒரு காதல்', 'நியூயார்க் நகரம்', 'அம்மி மிதிச்சாச்சு' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்கள்.

இதைத்தொடர்ந்து 2016ல் ஆரி அர்ஜுனன், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் நெடுஞ்சாலை படம் இவரது இயக்கத்தில் வெளியானது. சி.சத்யா இசையில் இப்படத்தின் பாடல்கள் பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. அடுத்தாக அவர் தெலுங்கில் 'ஹிப்பி' என்ற பத்தை இயக்கினார்.

இந்நிலையில், சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து இவர் 'பத்து தல' படத்தை இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், கலையரசன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

ஒளிப்பதிவுப் பணிகளை ஃபரூக் ஜெ.பாஷா கவனிக்கிறார். பிரவீன் கே.எல்.இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். 'சில்லுனு ஒரு காதல்' படத்தை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதலால் 'பத்து தல' மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த 2021 ஜனவரி 18ல் வெளியானது. இதனை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு 2022ம் ஆண்டு ஜூலையில் துவங்கியது. மேலும் நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பரில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கின. இந்நிலையில், 'பத்து தல' படத்தில் தனது டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து பத்துதல படத்தின் டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவுறும் நிலையில், படத்தின் இசை மற்றும் மற்ற அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரவு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அவரது 'பத்து தல' படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவல் உங்கள் பார்வைக்கு. 

Pathu thalai dubbing over👍👍👍 pic.twitter.com/WtRrYMUjYC

— Reddin Kingsley (@KingsleyReddin) January 4, 2023