தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். புஷ்கர் - காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் மற்றும் மாதவன் நடிக்கும் மாறா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா. 

கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது. 

லாக்டவுன் காரணமாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை ரசிகர்களுடன் நடத்தி வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் புல்லட் பைக்கை ஓட்டி கீழே விழுந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கினார்.

சினிமா துறையில் ஹீரோக்கள் திருமணம் ஆனாலும் தொடர்ந்து பல படங்களில் நடிப்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அதுவே ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டால் பெரிய விஷயமாக தெரிகிறது. அதையும் மீறி நடிக்க வரும் ஒரு சில நடிகைகள் புறக்கணிக்கப்படலாம் அல்லது குணசித்திர வேடங்கள் தான் கிடைக்கும். திருமணமான நடிகைகளை ஹீரோயினாக நடிக்க வைக்க சினிமா துறையினர் தயக்கம் காட்டுவது காலம் காலமாக நடந்துவரும் ஒன்று தான்.

இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு ஒரு நடிகையின் டிமாண்ட் அல்லது விரும்பத்தக்க விஷயங்கள் குறைந்து போய்விடுமா? சூப்பர் ஸ்டார் இல்லை, ஒரு சாதாரண திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை. இதற்கான பதிலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.. 10 மதிப்பெண்கள் என கேள்வியாக கேட்டுள்ளார். 

நடிகையாக இருக்கும் என்னுடைய நெருக்கமான தோழி ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவரிடம் ஒரு சினிமா துறை நபர் வந்து நீங்கள் தொடர்ந்து நடிப்பீர்களா என்று சகஜமாக கேள்வி கேட்கிறார். இப்படி ஒரு கேள்வியை அவர் சகஜமாகவும் எந்தவித தடை இன்றியும் கேட்பதைப் பார்த்து நான் பிரமித்து விட்டேன். எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் யோசிக்கத் தோன்றியது. அதனால் தான் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றார்.