அனிருத் பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் ட்விட்டரில் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ராஜா ராணி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. மௌனராகம் பாணியில் ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மெகா ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து விஜயுடன் இவர் கூட்டணி சேர்ந்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன. அதன்பின் அவர் தமிழில் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், இந்தியில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அட்லீ அறிவித்திருந்தார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ‘Red Chillies Entertainment’ நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.கே.விஷ்ணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ரூபன் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மாஸ் ஹீரோக்கள் கிடைத்துவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களைக் கொண்டாடித் தீர்க்கும் வகையில் படத்தின் காட்சிகளால் அவர்களுக்கு அழகுசேர்ப்பது அட்லிக்கு கைவந்த கலை. இதனாலேயே இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ரசிகர்களிடையே 'ஜவான்' படம் குறித்த எதிர்பார்ப்பு பலமாக இருந்துவருகிறது. 

சிறப்புகள் பல உள்ள 'ஜவான்' படத்தைச் சுற்றி சர்ச்சைகளும் உள்ளன. அண்மையில் 'ஜவான்' படத்தின் கதை தமிழில் விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதையை ஒத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புகாரைப் பரிசீலித்த தயாரிப்பாளர் சங்கம் இரண்டும் இருவேறு கதைகள் என்று அறிவித்தது.

இந்நிலையில், அனிருத் குறித்து ஷாருக்கான் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்டுள்ள கேள்விக்கு ஷாருக்கான் அளித்துள்ள கியூட் பதில் இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

அதில் அவரது ரசிகர், 'One word for aniruddha #AskSRK' என்று கேள்வியெழுப்பவே, அவர், "ஜவான் திரைப்படத்திற்காக அட்லியுடன் சேர்ந்து ஒரு அழகான பாடலை அனிருத் தந்துள்ளார். அவர்கள் இருவருமே நல்ல மற்றும் நகைச்சுவை பண்புகள் கொண்ட மனிதர்கள்" என்று பதிலளித்துள்ளார்.

2023 புத்தாண்டை முன்னிட்டு இயக்குநர் அட்லீ முக்கியமான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 2023ம் ஆண்டு 'ஜவான்' படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி படத்தின் இசை, டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அப்டேட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகரின் கேள்வியும் அதற்கு ஷாருக்கான் அளித்த பதிலும் உங்கள் பார்வைக்கு.

 

He just composed a lovely song for Jawan with Atlee. Too good both of them are and fun. https://t.co/hUKLekPAHs

— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023