தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தளபதி விஜய் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், நான் எப்படி எம்.ஜி.ஆர் ரசிகனோ, அதே போல் சிபி தீவிர விஜய் ரசிகர். என் மகள் எனக்கு பிடிக்குமென்று எம்.ஜி.ஆர் நடித்த அன்பேவா படத்தின் DVD-யை பரிசளித்தார். அதே போல் சிபியின் பிறந்தநாளுக்கு கில்லி பட DVD-யை பரிசளித்தார். 

எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களுக்கு பிறகு நான் அதிகம் விரும்பி பார்ப்பது விஜய் நடித்த படங்களை தான். காரணம் ஜாலியாக இருக்கும், கருத்து, மெசேஜ், சண்டை காட்சிகள் போன்றவை இருக்கும். இதெல்லாம் தாண்டி ஆணவம் இல்லாத அழகு, அன்பான சிரிப்பு விஜய்யிடம் உள்ளது என்று அதில் பேசியுள்ளார். 

இந்த அரிய வீடியோவை சிபிராஜின் ரசிகை ஒருவர் பகிர்ந்துள்ளார். சிபிராஜூம் இதை பார்த்தவுடன் ரீட்வீட் செய்துள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களை நேசிக்கும் பலருக்கும் தளபதி விஜய்யை பிடிக்கும் என்று கூறுவார்கள். சிபிராஜ் தற்போது கபடதாரி எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.