தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சந்தானம். சின்னத்திரையில் கலக்கி வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். விருது விழாக்களில் சந்தானம் பெயர் நாமிநீஸ் லிஸ்டில் வந்துவிட்டால், அவருக்கு தான் நிச்சயம் அவார்ட் என்றிருந்த காலமெல்லாம் உண்டு. 

நகைச்சுவை நடிகர்கள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படிதான் சந்தானமும் ஹீரோவானார். சந்தானம் தயாரித்து நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கவும் செய்தார். சந்தானம் ஹீரோவான நேரத்தில் சூரி, யோகி பாபு, சதீஷ் இவர்கள் காட்டில் நல்ல மழை. 

இந்நிலையில் சந்தானம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் காலரிடம் பேசும் சந்தானம், நான் நல்லா இருக்கிறது புடிக்கலையா உங்களுக்கு, என்னை போய் ஹீரோவா போட்டு படம் எடுக்கிறேனு சொல்றீங்களே என தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சந்தானத்தின் வித்தியாசமான காமெடிகளை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி நகைச்சுவை நடிகராகலாம், விரும்பினால் ஹீரோவும் ஆகலாம் என்பதை சந்தானம் நிரூபித்துள்ளார்.

சந்தானம் தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.