மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. பாஹுபலி படத்தையும், 300 பருத்திவீரர்கள் படத்தையும் கிண்டல் செய்வது போல் அமைந்துள்ளது. லொள்ளு சபா பாணியில் ட்ரைலர் உள்ளது என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். 

ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக சந்தானம் நடிக்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தார். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது என விவரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்த படத்திற்காக தனது டப்பிங் பணியை சமீபத்தில் நிறைவு செய்தார் சந்தானம். 

எதார்த்தமான டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கவும் செய்தார். 

இது தவிர்த்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.