ரேடியோ தொகுப்பாளராக இருந்து பிறகு சில படங்களில் காமெடியனாக நடித்தவர் RJ பாலாஜி. கடந்த ஆண்டு வெளியான LKG படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார். 

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் RJ பாலாஜி கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது. பாலாஜி பந்தை பவுண்டரிக்கு அடித்து விட, இல்லை என்று விவாதிக்கின்றனர் எதிரணியினர். எதிரணியில் இருந்து நடிகர் சரித்திரன் வந்து பேசுகிறார். இதற்கு நான்கு ரன்கள் வழங்கப்பட்டதா... இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

சினிமா ஒருபுறம் இருந்தாலும், கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார் RJ பாலாஜி. ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த தருணத்தில் RJ பாலாஜி கிரிக்கெட் வீடியோவை பகிர்ந்தது ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.