பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14-ம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். உலகம் முழுவதும் உள்ள திரை ரசிகர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல திரைப்படங்களில் நடித்தாலும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களின் அன்பை பெற்றார். சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் என 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகை ரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே இல்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். கதவைப் பூட்டிக் கொண்டு பல மணிநேரமாகக் கதறி அழுவார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில், ரியா சக்கரவர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், இன்னும் என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன். என் இதயத்தில் நிவர்த்தி செய்ய முடியாத உணர்வின்மை இருக்கிறது. நீங்கள் காதலையும் அதன் சக்தியையும் நம்ப வைத்தீர்கள். எளிய கணிதத்தின் மூலம் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை கற்றுக்கொடுத்தீர்கள். உங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டேன் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

இப்போது நீங்கள் மிகவும் அமைதியான இடத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலவு, நட்சத்திரங்கள், விண்மீன்கள் ஆகியவை ஒரு சிறந்த இயற்பியலாளரை திறந்த கைகளுடன் வரவேற்றிருக்கும். இரக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்ட நீங்கள் ஒரு விண்மீனாகி விட்டீர்கள். உங்களுக்காகக் காத்திருந்து உங்களை மீண்டும் என்னுடன் அழைத்துவர விரும்புகிறேன். 

நீங்கள் இந்த உலகம் கண்ட அதிசயம். நமக்கான அன்பை, என்னிடம் உள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. அது நம் இருவருக்கும் அப்பாற்பட்டது என்று நீங்கள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். அமைதியாக ஓய்வெடுங்கள் சுஷி. உங்களை இழந்து 30 நாட்களாகிவிட்டது. ஆனால் வாழ்நாள் முழுவதும் காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று எமோஷனலான இந்த பதிவை செய்துள்ளார். 

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முகேஷ் சப்ரா இயக்கியுள்ளார். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் தான் தில் பேச்சரா. இப்படத்தை ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார். இந்த படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.