கர்நாடகாவில் பேருந்தின் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் சாதாரண மனிதர், நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். கே. பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தன் கடின உழைப்பால் இன்று மக்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாராக உள்ளார். 70 வயதிலும் மனிதர் சுறுசுறுப்பாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

ரஜினிகாந்த் நடிக்க வந்து 45 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ரசிகர்கள் ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடினார்கள். சூப்பர் ஸ்டார் ஆனாலும் அதே எளிமையுடன் இன்னும் இருக்கும் ரஜினியை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.

லாக்டவுனுக்கு முன்பு சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. 

இந்நிலையில் அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்றும், கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்த பிறகு மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக நம் மனதை ஆளும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. தலைவர் கூறுவது போல் இந்த ஆட்டம் போதுமா குழந்தை....