தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த லாக்கப் டெத் சம்பவத்தை தமிழகத்தில் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.போலீசார் தங்கள் பதவியை பயன்படுத்தி அப்பாவிகளை துன்பப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் பல இடங்களில் இது குறித்து போராட்டங்கள்,சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த வழக்கில் உடனடி தீர்வு வேண்டும் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தங்கள் வாழக்கையில் போலீசால் நடந்த சில கசப்பான சம்பவங்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பலரும் குற்றம் சாட்டிவந்தனர்.ரஜினிகாந்த் தற்போது ஜெயராஜின் குடும்பத்தினரை நேரடியாக போனில் அழைத்து பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.ரஜினிகாந்தின் PRO ரியாஸ் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் ரஜினிகாந்த் நேரடியாக ஜெயராஜின் மனைவி மற்றும் பென்னிக்ஸின் தாயாரிடம் போனில் பேசி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை , அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய ரஜினி முன்வந்துள்ளாரா இல்லையா என்பது குறித்த தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று தமிழக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.