தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இது துல்கரின் 25-வது படமாகும். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மசாலா கஃபே இசையமைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்திருந்தார். 

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்தது. படத்தில் கெளதம் மேனன் சிறப்பான பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய TRPயை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது.இந்த ஆண்டு வெளியான பல படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படமாகும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் தெலுங்கு உரிமையை பெற்ற பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சமீபத்தில் இந்த திரைப்படத்தை ஒளிபரப்பியது. இவ்வாறு ஒளிபரப்பப்பட்ட இப்படம் அதிகமான வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட்டு 7.1 என்ற கணக்கில் TRP யை பெற்று இதுவரை இருந்த TRP ரேட்டிங்கை முறியடித்து, இந்த படம் TRP யில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

பல்வேறு சாதனைகளை இப்படம் நிகழ்த்தியிருந்தாலும், பல பாராட்டுகளை பெற்றிருந்தாலும்.. ஒருவரின் பாராட்டு இயக்குனர் தேசிங் பெரியசாமியை வானில் பறக்க வைத்துள்ளது. அவர் வேற யாருமில்லை.. நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். தமிழ் திரையுலகில் எந்த படம் வெளியானாலும், நேரம் கிடைக்கையில் அதை பார்த்து விட்டு படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைபேசி வாயிலாகவோ வாழ்த்துவார். படத்தில் உள்ள விஷயங்களை பகிர்ந்து தரமான விமர்சனங்களையும் கூறுவார். 

உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ஒருவர், இப்படி செய்வது வளரும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சூப்பர்... எக்சலென்ட்... மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு உங்களுக்கு என சூப்பர்ஸ்டார் கூறிய வார்த்தைகள் மட்டும் தான் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. பறந்துகொண்டு இருக்கிறேன்.. கடவுளுக்கு நன்றி என மகிழ்ச்சியின் உச்சத்தில் பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவின் கீழ் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர் திரை விரும்பிகள்.