சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மோசமான உடல் நிலையின் காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய இந்த அறிவிப்புக்குப் பின் எந்த ஒரு மனநிலையில், வேதனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக நெகழ்ச்சியோடு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் தேர்தலுக்குப் பிறகும் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களை பேசி வந்த நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி மக்கள் மன்றம் குறித்தும் பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அந்த அறிக்கையில், 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்ற சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன? என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. 

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம்-ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். 

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். 
வாழ்க தமிழ் மக்கள்!   வளர்க தமிழ்நாடு!  ஜெய்ஹிந்த்! 
அன்புடன், ரஜினிகாந்த்
 

என தனது அரசியல் நிலைப்பாட்டையும் மக்கள் மன்றத்தின் நிலையையும் விளக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக தற்போது மாற்றியுள்ள இந்த அறிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.