நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இயல்பாக ஊரை சுற்றி பல மாதங்கள் ஆன நிலையில் உள்ளனர் மக்கள். திரைப்பிரபலங்களுக்கும் இதே கதி தான். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

இப்படியிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னரே அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக வெளியில் தலை காட்டினார்.

இந்நிலையில் லாக்டவுனில் முதல்முறையாக இன்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அவர் ஓட்டிச் செல்வது லம்போர்கினி என்ற சொகுசு கார் என்றும் கூறப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் எந்த ஒரு செயலை செய்தாலும், ஸ்டைலாக இருக்கும். அதே போல் ஸ்டைலாக காரை ஓட்டிச்செல்கிறார் நம் அண்ணாத்த. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உருவாகும் திரைப்படம் அண்ணாத்த. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.