ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனிமி எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக நேற்று மாலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய காட்சிகள் டிசம்பர் மாதத்தில் படமாக்கப்படவுள்ளன. தற்போது விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.

படத்தின் ஓப்பனிங் சாங் காட்சிகளை சமீபத்தில் படமாக்கினர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. 

அரண்மனை 3 படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆர்யா திரும்பியவுடன், விஷாலுக்கும் அவருக்குமான காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஊட்டியில் படமாக்கவுள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கிளாப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது. கிளாப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிரகாஷ் ராஜின் புகைப்படங்கள் இணையத்தை அசத்தியது. கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். கே.ஜி.எஃப், தலைவி, அக்னிச் சிறகுகள், வக்கீல் சாப் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.