தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்த சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா படத்தில் “மீனம்மா மீனம்மா” , பணக்காரன் படத்தில் “சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது” , விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் “ஆட்டமா தேரோட்டமா” , கார்த்திக்கின் கோபுர வாசலிலே படத்தில் “காதல் கவிதைகள் படித்திடும் நேரம்” என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். 

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிறைசூடன் 5000-கும் அதிகமான பக்தி பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியராக மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ள பாடலாசிரியர் பிறைசூடன் தன் சிறந்த பாடல்களுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளை வென்றுள்ளார். 

மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்கள் கவிஞர் பிறைசூடனுக்கு “கவி ஞானி” என பட்டமும் கொடுத்துள்ளார்.இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த கவிஞர் பிறைசூடன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 65. மறைந்த கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.