தமிழ் திரையுலகில் பயமுறுத்தும் வில்லன்களில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம். 1988-ம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த பொன்னம்பலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டது தமிழ் சினிமா. 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி வில்லன் நடிகராக அவதாரமெடுத்த பொன்னம்பலம், உச்ச நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். பிஸியாக இருந்த காலத்தில் ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் நடித்தாராம். 

மாநகர காவல், மைக்கெல் மதன காமராஜன், வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மாயி போன்ற வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக நாட்டாமை படத்தில் இவரது நடிப்பு, தாய்கிழவி என கூப்பிடும் ஸ்டைல் பெரும் பாராட்டை பெற்றது. இதேபோல் முத்து படத்திலும் வில்லத்தனம் நிறைந்த வேலைக்காரராக நடித்திருப்பார். 

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறும் போது நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் பொன்னம்பலத்தை அழைத்து வந்ததை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். 

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் உதவி செய்து வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு  நலம் விசாரித்து வருகிறாராம்.

இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் விரைவில் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் அங்கிருந்தே போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.