கடந்த 1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். 

சில நாட்கள் முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது. லாக்டவுன் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் பல திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கான எடிட்டிங் பணிகளை இயக்குனர் ஷங்கர் துவங்கிவிட்டதாக சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பாயல் ராஜ்புட் நடனமாடுகிறார் என்கிற தகவல் தீயாக பரவியது. நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாக, இதை பார்த்த பாயல் ராஜ்புட் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தயவு செய்து இது போன்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். இது போன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. நான் அந்த படத்தில் எந்த பாடலுக்கும் நடனமாடவில்லை. இதுதொடர்பாக யாரும் என்னை இதுவரை அணுகவில்லை.

நீங்கள் இந்தியன் 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறீர்களாமே என்று கேட்டு பலரும் எனக்கு கடந்த சில நாட்களாக மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறேனா என்று வதந்தியை பரப்புகிறார்கள். நான் எந்த புது ப்ராஜெக்டிலும் கையெழுத்திடவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாயல். 

தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையானவர் பாயல் ராஜ்புட். 6 ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் சன்ன மேரேயா பஞ்சாபி படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். கார்த்திகேயாவின் RX 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் பாயல். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.