பட்டிமன்றம் என்றாலே தமிழர்களுக்கு தனி அபிப்ராயம் உண்டு. அதிலும் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றங்களுக்கு ஒட்டுமொத்த தமிழினமும் ரசிகர்களாய் காத்திருக்கும். இந்த பட்டிமன்றங்களின் இருபெரும் தூண்களாக இருப்பவர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர்.

தனக்கே உரித்தான பாணியில் பாரதி பாஸ்கரின் பேச்சும் சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும். கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்த பாரதி பாஸ்கர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பின் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த பேச்சாளராக மட்டுமல்லாமல் எஎழுத்தாளராகவும் "அப்பா என்னும் வில்லன்", "சிறகை விரி", பற மற்றும் "நீ நதி போல ஓடிக்கொண்டிரு" உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார் பாரதிபாஸ்கர். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கருக்கு தொடர்ந்து பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.அவருக்கு வயது 52.

அதில் மூளையில் இருக்கும் நரம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 

தமிழ் மட்டுமல்லாது தனது நல்லறிவாலும் புன்னகையாலும் நன்கு அறியப்பட்டவரான பாரதி பாஸ்கர் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.  உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் அவருக்காக புன்னகையை சேர்த்து வைத்திருப்பார்கள். பாரதி பாஸ்கர் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் அவர் விரைவில் குணமடைந்து வர பிரார்த்தனை செய்கிறேன் அவரைப் போன்ற ஒரு அழகான ஆத்மா இவ்வுலகிற்கு தேவை ...

என குறிப்பிட்டுள்ளார் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டி பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனைகளை பகிர்ந்து வருகிறார்கள்.