தனக்கென தனி ஸ்டைலில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் யோகி பாபு அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார். அந்த வகையில் முதலாவதாக அடுத்த சில தினங்களில் பொங்கல் ரிலீஸாக வரும் தளபதி விஜயின் வாரிசு படத்தில் காமெடியனாக கலக்கியிருக்கிறார்.

அடுத்ததாக மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்து வரும் நடிகர் யோகி பாபு, காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பூமர் அங்கிள் மற்றும் மெடிக்கல் மிராக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக காசேதான் கடவுளடா, சலூன், பூச்சாண்டி ஆகிய படங்கள் யோகி பாபு நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே தனது நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கும் யோகி பாபு நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் பொம்மை நாயகி. 

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொம்மை நாயகி திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து வழங்குகின்றன.யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பொம்மை நாயகி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சுந்தரமூர்த்தி.K.S இசையமைத்துள்ளார். பொம்மை நாயகி திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பொம்மை நாயகி படத்தில் இருந்து அடியே ராசாத்தி எனும் ரம்யமான பாடல் தற்போது வெளியானது. மனதை வருடும் அந்த வீடியோ பாடல் இதோ…