தமிழ் திரையுலகில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் இயக்குனர் ராம். கடைசியாக இவர் இயக்கிய பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இப்படம் திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ராமின் இயக்கத்தில் மலையாள நடிகர்கள் நடிக்க ஆர்வமாக இருந்த நிலையில், நிவின்பாலியை வைத்து இரு மொழிகளில் ஒரு படத்தை எடுக்க ராம் முடிவு செய்துள்ளார்.

2012 முதல் வருடத்துக்கு நான்கு படத்திற்கு மேல் நடித்து வந்த நிவின் பாலிக்கு கடைசி வருடங்கள் சரியாக அமையவில்லை. 2019-ல் அவரது நடிப்பில் வெளியான மூன்று படங்களில் மூத்தோன் திரைப்படம் மட்டும் ஓரளவு பெயர் வாங்கித் தந்தது. 

நயன்தாராவுடன் நடித்த லவ் ஆக்ஷன் ட்ராமா, த்ரில்லர் படமான மைக்கேல் இரண்டும் சுமாராகவே போனது. 2020-ல் ஒரு படமும் வெளிவரவில்லை. இந்த வருடம் ராஜீவ் ரவி இயக்கத்தில் துறமுகம் (துறைமுகம்) படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை.

இந்நிலையில், ராமின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நிவின். 2013-ல் வெளிவந்த நேரம், திரைப்படம் நிவின் பாலியின் முதல் தமிழ்ப் படம். அதன் பிறகு 2017-ல் ரிச்சி படத்தில் நடித்தார். படம் சரியாகப் போகவில்லை. ராமுடன் அவர் இணைவது நிவின்பாலியின் மூன்றாவது தமிழ்ப் படமாகும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

திரை ரசிகர்கள் இந்த காம்போவை பார்க்க மிகுந்த ஆவலில் உள்ளனர். இயக்குனர் ராம் நிவினை எப்படி செதுக்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.