ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இன்று போட்டியிட்டதையொட்டி பாரம்பரிய உடையான புடவை, வேஷ்டியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார், விக்னேஷ் சிவன். இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான் கைப்பற்றியது.

இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. 

முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள் இயக்கனரால் எடுத்தப்பட்ட இப்படத்திற்கு தன்னுடைய பின்னணி இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில், இன்று நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பர்யமான வேஷ்டி புடவையில் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.