தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக ஜொலிக்கும் நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜமான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக களமிறங்குகிறார். முன்னதாக நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் நாளை டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தில் சத்யராஜ், அனுப்பம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவரும் கனெக்ட் படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல தொகுப்பாளர் DD - திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் பிரத்தேக பேட்டியில் பேசிய நயன்தாரா தனது திரைப்பயணம் குறித்தும் கனெக்ட் திரைப்படம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த வகையில், திருமணத்திற்கு பின்னர் பெண்கள் CAREERஐ தொடர்வதில் இன்னமும் நிறைய தடைகள் இருப்பது ஏன்..? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஏன்..? அது தான் எனக்கும் புரியவில்லை.. இது வந்து ஒரு கேள்வியாக நீங்கள் கேட்கிற அளவிற்கு ஒரு விவாதம் இத்தனை வருடங்களாக இருக்கிறது. எதற்காக அதைப் பற்றி பேச வேண்டும். திருமணம் முடிந்த பிறகு ஆண்கள் அடுத்த நாளே வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதுவே ஒரு பெண்ணுக்கு கல்யாணம் முடிந்து விட்டால் ஏன் ஒரு இன்டர்வெல் பாயிண்ட்டாக இருக்கிறது. திருமணம் என்பது ஒரு இன்டர்வல் பாயிண்ட் கிடையாது. திருமணம் உங்களை முழுமைப்படுத்துகிறது. செட்டில் ஆக்குகிறது. அப்படி செட்டில்லாக உணரும்போது நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டும் என இருப்பது தான்… நான் பார்த்து, அனைத்து பெண்களுக்கும் மனதில் இருக்கும் மனநிலை அதுதான். ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு பொறுப்புகள் கூடுகின்றன. ஆனால் அதே பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு போதும் அவ்வளவு தான் உங்களுக்கு முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்கு போகலாம், ஓய்வு எடுக்கலாம்.. அந்த மாதிரி ஏன் இருக்கிறது? என நிஜமாகவே புரியவில்லை. என்னை பொருத்தவரை எனக்கு எதுவுமே மாறவில்லை.. வீட்டிலும் எதுவும் மாறவில்லை.. எனது மனநிலையிலும் எதுவும் மாறவில்லை... இது வாழ்க்கையின் புதிய பகுதியின் அற்புதமான தொடக்கம் என நினைக்கிறேன்... மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியவில்லை. நான் நினைக்கிறேன், மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரைக்கும் திருமணத்திற்கு பிறகு இது இன்னும் நன்றாக தான் இருக்கிறது. எனக்கு இப்படி ஒரு துணை இருப்பதால் நான் இன்னும் நன்றாக எதையும் செய்ய முடிகிறது. நான் இன்னும் அதிகம் சாதிக்கலாம், இன்னும் அதிகமாக படங்களை புரிந்து கொள்ளலாம். இரண்டு இதயங்கள் இரண்டு ஆன்மாக்கள் இணையும்போது ஒரு அழகான வாழ்க்கை… அதை ஏன் கொண்டாடக்கூடாது. அதை ஏன் ஒரு தொடக்கமாக எண்ணக்கூடாது… அப்படி யோசித்தால் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்” என நயன்தாரா தெரிவித்துள்ளார். நயன்தாராவின் அந்த முழு பேட்டி இதோ…