நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு சினிமா துறையில் உள்ள வாரிசு கலாச்சாரம், குரூப்பிஸம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் பேசிவருகிறார்கள். சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் நிலையில், அவரை அந்த நிலைக்கு தள்ளியது யார் என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிகழ்வுக்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் பலர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக கரண் ஜோஹர், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்ட பலர் மீது அதிக அளவில் விமர்சனங்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், தனக்கு படங்கள் கிடைக்க விடாமல் செய்வதற்காக ஒரு கேங் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கூறி அனைவருக்கும் அதிர்ச்சி தந்தார். தில் பேச்சாரா படத்திற்க்கு ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். 

உங்களிடம் போக வேண்டாம் என பாலிவுட்டில் பலரும் பல கதைகள் சொன்னார்கள் என அந்த பட இயக்குனர் தன்னிடம் சொன்ன போது தான் தனக்கே அது தெரியவந்தது என அவர் கூறி உள்ளார். இது பற்றிய விவாதங்கள் தான் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது .ரஹ்மானுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவை செய்துள்ளார். தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என பதிவு செய்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவிலும் இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். எப்போதும் எதற்கும் தயங்காத நட்டியின் இந்த தையிரியமான பதிவு மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

திரையுலகில் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.