லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது மாஸ்டர் திரைப்படம். 

பற்றியெரியம் நெருப்பின் நடுவே பதுங்கியிருக்கும் பவானி, காலப்போக்கில் கட்டுக்கடங்காத அரக்கனாக உருவெடுக்கிறான். அங்கிருந்து நகர்கிறது மாஸ்டர் கதை. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களை வைத்து போதைப் பொருள் கடத்தல், கொலை என ஆட்சி செய்யும் பவானி தனது அரசியல் வருங்காலத்தை நோக்கி பயணிக்கிறான். இது ஒருபுறமிருக்க...மறுபுறம் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட JD எனும் பேராசிரியர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க வருகிறார். முதலில் ஜாலியாக இருந்தாலும், அதன் பின் அங்கு நடக்கும் சம்பவங்களை உணர்ந்து வில்லன்களுக்கு பாடம் கற்றுத்தருவதே இந்த மாஸ்டர் படத்தின் கதைக்கரு. 

ஓடிடி வெளியீட்டைத் தவிர்த்து திரையரங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படக்குழுவினருக்கு அமெரிக்கத் திரையரங்க நிர்வாகங்கள் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கொரோனா பிரச்சனையால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் மாஸ்டர் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 40 கோடி வசூலித்துள்ளது. மாஸ்டர் படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் விஜய், மாளவிகா, லோகேஷ் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழு கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. 

வீடியோவில் தளபதி விஜய் பட்டு வேட்டி, சட்டை அணிந்து அம்சமாக உள்ளார். ஒரு படம் ரிலீஸான பிறகும் கூட அப்டேட் கொடுக்கும் ஒரே தயாரிப்பு நிறுவனம் இது தான் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர் தளபதி ரசிகர்கள். மாஸ்டரை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.