கடந்த 1978-ம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். பாரதி ராஜா இயக்கிய இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமா இலக்கணத்தை மாற்றிய படங்களில் இப்படமும் ஒன்று. இளையராஜா இசையமைத்திருந்தார். ஹாலிவுட் பாணியில் த்ரில்லர் ஜானரில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் சிகப்பு ரோஜாக்கள் 2 அறிவிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படம் அறிவிப்புடனே நின்றுவிட்டது.

அதன் பின் சில மாதங்களுக்கு முன்பு சிகப்பு ரோஜாக்கள் 2 குறித்த அறிவிப்பு வெளியானபோது, அந்தப் படத்தின் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும், நேரம் வரும்போது இயக்குவேன் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கூறியிருந்தார்.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக சிகப்பு ரோஜாக்கள் 2 படம் உருவாக உள்ளதாகவும் மனோஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த வதந்தி தொடர்பாக மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். சமீபகாலமாக சிகப்பு ரோஜாக்கள் 2 குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எதுவுமே உண்மையில்லை. அனைத்தும் முடிவானவுடன் நானும், என் தந்தை பாரதிராஜாவும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். அனைவருக்கும் என்று பதிவு செய்துள்ளார் மனோஜ். 

மனோஜ் சிறந்த நடிகரும் கூட. 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் படத்தில் அறிமுகமானவர், தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், பல்லவன், மகாநடிகன் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சாம்பியன் படத்தில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் STR நடிக்கும் மாநாடு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் மனோஜ்.