2017ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் கஸாபா என்கிற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படமும் இதில் மம்மூட்டி பேசிய வசனங்களும் அப்பட்டமாக ஆணாதிக்கச் சிந்தனைகளை, பெண்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதாக நடிகை பார்வதி குற்றம் சாட்டியிருந்தார். 

இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பார்வதிக்கும், மம்மூட்டி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரசிகர்கள் பலரும் பார்வதியை அதிகப்படியாகக் கிண்டல் செய்தனர். இதன் பிறகு தொடர்ந்து மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பார்வதி கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ரதீனா ஷர்ஷாத் என்கிற அறிமுக பெண் இயக்குநர் இயக்கத்தில் புழு என்கிற திரைப்படத்தில் மம்மூட்டியுடன் முதல் முறையாக பார்வதி இணைந்து நடிக்கிறார். மம்மூட்டியின் மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார்.

துல்கர் சல்மானின் தயாரிப்பில் மம்மூட்டி நடிப்பதும் இதுவே முதல் முறை. தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பை, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, வாழ்த்துகள் கூறி, நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.