இந்திய திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். 

நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் மாதவனும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன், மின்னலே படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் மிக மோசமான டான்சர் என்று தன்னைத் தானே கிண்டலடித்துள்ளார். இதற்கு பல இளம் ரசிகைகள், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்க வந்து புன்னகை செய்தாலே போதும் மேடி சார் என்று கமெண்ட் செய்துள்ளனர். இப்போது வரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு நடனமாட தெரியாது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

மாதவன் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நளதமயந்தி. ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கமல் ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். படத்தில் விருமாண்டி கெட்டப்பில் கௌரவ தோற்றத்தில் வந்திருப்பார். இயக்குனர் மௌலி இயக்கத்தில், மாதவன், கீத்து மோகன்தாஸ், ஸ்ருத்திகா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்த காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்திருந்தார். 

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படமான சைலன்ஸ் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் மாதவன். திகில் கலந்த கிரைம் த்ரில்லரான இப்படம் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் சார்லி ரீமேக்கான மாறா திரைப்படத்தில் நடித்துள்ளார்.