இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் VJ பாவனா. கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடல் மற்றும் கிரிக்கெட் கமென்ட்ரி போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால், இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் நடந்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார் பாவனா. 

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் தல தோனி வெர்ஷனை பாடி வெளியிட்டுள்ளார் பாவனா. இந்த பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. தோனியின் பிறந்தநாளில் அவரது புகழ் பாடும் இப்பாடல் இணையத்தை அசத்தி வருகிறது. அருண் ராஜா காமராஜ் எழுதிய குட்டி ஸ்டோரி வரிகளை தோனிக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளனர். 

இவரு வழி தனி வழி, ராஞ்சி சூப்பர் கிங்ஙா சீறி வந்த பாயும் புலி
கிரவுண்ட்ல இவரு நடந்து வந்தா ஃபேன்ஸ் வில் பி கிரேஸி
ஹெலிகாப்டர் ஷாட்டு நண்பா.. ஆல்வேய்ஸ் சரவெடி
டிசைன் டிசைன்னா சிக்சர்... வச்சு செய்வாரு மாப்பி
என்று தோனியின் குட்டி ஸ்டோரி வெர்ஷன் வரிகள் இடம்பெற்றுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 39-வது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நள்ளிரவு 12 மணி முதல் சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது. ஹாப்பி பர்த்டே தோனி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது. தோனிக்கு இப்படியொரு ரசிகர்களா என்ற இன்பதிர்ச்சியில் உள்ளனர் மற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள். 

கிரிக்கெட் ரசிகர்கள் தவிர்த்து மாஸ்டர் படக்குழுவினர் அனைவரையும் இந்த வெர்ஷன் உற்சாகப்படுத்தும் என்று கூறினால் மிகையாகாது.