கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் காரணமாக, உலக நாடுகள் கடும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.79 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல், கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் பயம் போகவில்லை.

இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சனில் இருந்து தமன்னா வரை பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகை க்ரித்தி சனனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேனொக்கடேன் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். மகேஷ்பாபு ஜோடியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். 

அதன் பின்னர் இந்தியில் ஹீரோபன்டி, ஷாருக்கானின் தில்வாலே, அர்ஜுன் பாட்டியாலா, ஹவுஸ்புல் 4, பானிபட் உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இப்போது மிமி என்ற படத்தில் வாடகைத் தாயாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

அதை முடித்துவிட்டு சண்டிகரில் இருந்து மும்பை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார் க்ரித்தி. யாரும் கவலைப்பட வேண்டாம் நான் மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்தி கொண்டேன். கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பின் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாக தெரிவித்தார். மருத்துவர்கள் குழு மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததாம். முந்தைய முடிவு, RT PCR kit எனும் கொரோனா கிட்டில் ஏற்பட்ட தவறாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். 

நேற்று நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. ஹைதராபாத் சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்ததாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திக்கின்றனர் அவரது ரசிகர்கள்.