லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Keyars Statement Regarding Master Movie Release

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான கேயார், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின்  கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை. சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு  உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.

Keyars Statement Regarding Master Movie Release

 டிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில்  கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.

Keyars Statement Regarding Master Movie Release

 அதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே  வசூலில் சாதனை செய்து வருகின்றன. விஜய்யின் மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல  இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும்.  எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும்.மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள்  வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப் படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும். 

இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி  அமல்படுத்த முடியும்.

ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.