கடந்த ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு பெரிதும் பாராட்டுக்களைக் குவித்தது. துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். ரசிகர்களும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பை தந்தனர். யாரும் எதிர்பார்க்காத கதைக்களம், புதுமை நிறைந்த ஸ்கிரிப்ட் பாணி என விருந்தளித்திருப்பார் இயக்குனர் தேசிங்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் பிப்ரவரி 25-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில், தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி தம்பதியினருக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். படத்தின் வெற்றிக்காகவும், திருமண பரிசாகவும் இந்தக் காரைக் கொடுத்துள்ளார்.

இந்தப் பரிசு தொடர்பாக இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி சார். பெரிய ஆச்சரியம். இந்தப் பரிசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.