மன அழுத்தம் காரணமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், 30 வயதே ஆன மற்றொரு இளம் நடிகர், என்ன காரணத்திற்கு என்றே தெரியாமல், தற்கொலை செய்து கொண்டிருப்பது திரையுலகம் மற்றும் சினிமா விரும்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கர்நாடாக மாநிலம் மாண்டியாவை சேர்ந்தவர் நடிகர் சுஷீல் கவுடா. சுமார் 30 வயதாகும் இவர் கன்னட தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். மாடலாகவும் இருந்த சுஷீல் கவுடா ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் இருந்தார். கன்னட படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த சுஷீல் கவுடாவுக்கு துனியா விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் ரிலீஸாகாத துனியா விஜய்யின் சலாகா படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் சுஷீல் கவுடா. கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தன் சொந்த ஊரில் இருந்து வந்த சுஷீல், நேற்று தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கிற விபரம் இதுவரை வெளியாகவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இச்செய்தி அறிந்த சின்னத்திரையை சேர்ந்த கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுஷீல் ஆசைப்பட்டது போன்று பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நேரத்தில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று நண்பர்கள் வியக்கிறார்கள்.சுஷீலை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த லாக்டவுனில் கோலிவுட் நடிகர் சேதுவின் மரணம் தமிழ் ரசிகர்களை மிகவும் பாதித்தது. கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் சிரு என்கிற சிரஞ்சிவி சர்ஜாவின் மரணம் கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி வந்த நிலையில், மற்றுமொரு இளம் நடிகரின் தற்கொலை மரணம் சண்டல்வுட்டை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் தொடர்ந்து ஏற்படும் தற்கொலைகள் மற்றும் மரணங்கள் ரசிகர்களை பெரியளவில் பாதித்துள்ளது.