சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களை இயக்கினார். அடுத்ததாக தல அஜித் குமாரின் 50வது திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா மெகா ஹிட் ஆனது.

மேலும் நடிகர் கார்த்தியுடன் பிரியாணி , நடிகர் சூர்யாவுடன் மாஸ் மற்றும் சென்னை 600028-|| உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் மாநாடு. மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய திரைப்படம் குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் கிச்சா சுதீப் நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு நடிகர் கிச்சா சுதீப் தன் கையால் சமைத்த உணவை பரிமாறி உள்ளார். 

இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் "என்ன ஒரு கவனிப்பு... நன்றி கிச்சா சுதீப்… நீங்கள் ஒரு அற்புதமான சமையல் நிபுணர்... நம்முடிய அடுத்த திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... பிறந்தநாள் வாழ்த்துக்களை முன்கூட்டி தெரிவித்துக் கொள்கிறேன்.." என பதிவிட்டுள்ளார். வெங்கட்பிரபுவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.