இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் ப்ளாக பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குனர் P.வாசு அவர்களே சந்திரமுகி 2 திரைப்படத்தையும் இயக்குகிறார்.

தனக்கே உரித்தான ஸ்டைலில் முனி & காஞ்சனா சீரிஸில் வரிசையாக ஹாரர் காமெடி படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன் சூப்பர்ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் மைசூரில் தொடங்கிய சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரமான சந்திரமுகி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதனை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தற்சமயம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பயோபிக் திரைப்படமான எமர்ஜன்சி படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வரும் கங்கனா ரானவத் விரைவில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.