மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ரம். உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம் படத்தில் மிக முக்கியமான கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமைகள் குறித்த ருசிகர தகவல்கள் வெளிவந்தன. கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் ரிலீஸ் உரிமத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், மலேசியா ரிலீஸ் உரிமத்தை DMY கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை ஷ்ரேஸ்த் மூவிஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.