“எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்” என்று மத்திய அரசை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா, அன்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Kamal Haasan

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், மத்திய அரசை எதிர்த்தும், எச்சரிக்கும் தொனியிலும் பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாகப் பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான்.

Kamal Haasan

கடந்த 1950-ல் இந்தியா குடியரசான போது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிடப் பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

Kamal Haasan

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

 

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.” என்று உரத்த குரலில் கமல்ஹாசன் பேசி உள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.