ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலையாகும் டில்லி, அதுநாள் வரை பார்த்திராத தனது 10 வயது மகளைக் காண வருகிறார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டில்லியைப் பணியவைத்து, அதிகாரிகளை காப்பாற்ற அவரது உதவியை நாடுகிறார் பிஜாய் எனும் நேர்மையான காவல் அதிகாரி. இதற்கிடையில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப்பார்த்த அதிகாரிகள் குழுவை கொலைசெய்து, போதைப் பொருளை மீட்டுச் செல்ல அன்புவின் தலைமையில் புறப்பட்டு வருகிறது ஓர் மர்ம கும்பல். ட்ரான்ஸ்ஃபர் ஆர்டருடன் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுடன் கான்ஸ்டபில் நெப்போலியன். டில்லியுடன் பயணம் செய்யும் காமாட்சி கேட்டரிங் முதலாளி காமாட்சி. இதில் யாருடைய கை ஓங்கியது, டில்லி தன் மகளை பார்த்தாரா ? போதைப் பொருள் கும்பலின் தலைவனை கண்டு பிடிக்க முடிந்ததா உள்ளிட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இந்த கைதியின் கதை. 

தற்போது இந்த படம் டொரொன்டோவில் நடக்கும் இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனால் எப்போது டில்லியை பார்க்க போகிறோம் ? கைதி 2 எப்போது என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். ஆகஸ்ட் 9-ம் தேதி துவங்கும் இந்த பிலிம் ஃபெஸ்டிவல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

நடிகர் கார்த்தி சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் பிஸியாக இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் சுலதான் படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பாதிப்பால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.