ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். 

இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வழக்கமாக வரும் சிவப்பு நிற பென்ஸ் கார், இந்த பாடலிலும் வருகிறது. 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

இந்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதன் ரிலீஸ் தேதி தெரியவில்லை. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஜூலை மாதம் முழுவதும் தரமான அப்டேட்டுகளுடன் வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.  முதல் பாடலான ரகிட ரகிட பாடல்  குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். 

ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டரில் இந்த பாடல் தான் இடம் பெற்றிருக்கும் என்பது கூடுதல் தகவல். சோனி மியூசிக் சவுத் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றியுள்ளனர். கிராமத்தில் நடக்கும் திருவிழா அல்லது திருமண நிகழ்ச்சியில் இப்பாடல் இடம்பெற்றிருப்பது போல் தெரிகிறது.